தேனி
தேனி அருகேசாலை பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியல்
|தேனி அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைப்பு
தேனி அருகே பூதிப்புரத்தில் இருந்து தேனி மற்றும் போடி சாலைக்கு செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆதிப்பட்டி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் இருந்து பூதிப்புரம் கொட்டக்குடி ஆறு வரை சுமார் 2.8 கி.மீ. தூரம் சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் இந்த சாலை பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு ஒப்பந்தமிடப்பட்டது. இந்த சாலை சீரமைப்பு பணிகள் நேற்று நடந்தது.
தடுத்து நிறுத்தம்
ஆதிப்பட்டி கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்த போது தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக கூறி பொதுமக்கள் சிலர் அங்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். சாலை அமைக்க கொண்டு வந்த வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் காந்தசொரூபன், செயலாளர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் முனீஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சிலர் தரமான சாலை அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது மக்கள் கூறுகையில், '10 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அதை முறையாக சரி செய்துவிட்டு, அதற்கு மேல் தரமான சாலை அமைக்க வேண்டும். தற்போது நடப்பது போல் பணிகள் நடந்தால் விரைவில் அந்த சாலை சேதம் அடைந்து விடும். எனவே தரமான சாலை அமைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்றனர்.
சாலை தரமாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.