தேனி
தேனி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி
|தேனி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலியானார்
தேனி மாவட்டம், கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தீரன் (வயது 27). திருப்பூர் புறநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று இவர், போடி சொக்கநாதபுரத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டு வளைகாப்பு விழாவில் பங்கேற்க பதிவு எண் இல்லாத புதிய மோட்டார்சைக்கிளில் சென்றார்.
பின்னர் அங்கிருந்து கண்டமனூர் புதுக்காலனியை சேர்ந்த அஜித்குமார் (26), ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த குழந்தைசாமி (27) ஆகிய 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். டொம்புச்சேரி கால்நடை மருத்துவமனை அருகில் வந்தபோது, முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிரே பாலார்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், தீரன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீரன், அஜித்குமார், குழந்தைசாமி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீரன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.