தேனி
தேனி அருகே தியேட்டர் தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
|தேனி அருகே தியேட்டர் தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சிவசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 27). இவர் பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ந்தேதி அவர் தியேட்டரில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, தியேட்டருக்கு படம் பார்க்க வந்த சிலர், அவரிடம் தகராறு செய்தனர். தங்களுடன் வந்த பெண்களை ஜெயக்குமார் புகைப்படம் எடுத்ததாக கூறி அவரை தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தியேட்டர் மேலாளர் ராஜா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (47), கன்னியபிள்ளைப்பட்டி வரதராஜபுரத்தை சேர்ந்த பார்த்திபன் (31), மொட்டனூத்தை சேர்ந்த மகேந்திரன் (48), முருகேசன் (49), கணேசன் (48) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.