< Back
மாநில செய்திகள்
தேனி அருகே கிராம மக்கள் நடத்திய மீன்பிடி திருவிழா
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே கிராம மக்கள் நடத்திய மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

தேனி அருகே குன்னூரில் மீன்பிடி திருவிழா நடந்தது.

மீன்பிடி திருவிழா

தேனி அருகே குன்னூரில் செங்குளம், கருங்குளம் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் தண்ணீர் வற்றும் காலங்களில் கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

செங்குளம் கண்மாயிலும் தண்ணீர் வற்றியது. இதையடுத்து நேற்று அங்கு மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் பங்கேற்க குன்னூர், அம்மச்சியாபுரம், வாய்க்கால்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கையில் வலை, துப்பட்டா போன்றவற்றுடன் வந்தனர்.

மக்கள் உற்சாகம்

ஊர் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். உடனே, மக்கள் உற்சாக வெள்ளமாய் கண்மாய்க்குள் இறங்கி மீன்பிடித்தனர். இளைஞர்கள், சிறுவர்களும் மீன்பிடிக்க குவிந்தனர். அவர்கள் சிலர் குடும்பமாகவும், சிலர் குழுக்களாகவும் மீன்பிடித்தனர். குழுக்களாக பிடித்தவர்கள் தங்களுக்கு கிடைத்த மீனை பகிர்ந்து கொண்டனர்.

இதில், அதிக அளவில் திலேப்பியா மீன்கள் சிக்கின. அதுபோல், கட்லா, ஆரால் போன்ற மீன்களும் சிக்கின. மக்கள் மீன்களை உற்சாகமாக பிடித்து கூடைகள், பாத்திரங்களில் தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் வீடுகளில் மீன் சமைத்து சாப்பிட்டனர். கிராமங்களில் வீதியெங்கும் மீன் குழம்பு வாசம் வீசியது. சமைத்த மீன் குழம்பை உறவினர்களுக்கு கொடுத்தும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்