< Back
மாநில செய்திகள்
குளச்சல் அருகே  பேராசிரியர் வீட்டின் கதவை  உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு

தினத்தந்தி
|
5 Jun 2022 8:14 PM IST

குளச்சல்,

குளச்சல் அருகே பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.25 ஆயிரம் திருடி செல்லப்பட்டது. அதே சமயம் 40 பவுன் நகை தப்பியது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற பேராசிரியர்

குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 70). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தங்கலீலாவும் ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி நாகர்கோவிலில் உள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் தேவராஜ், வீட்டுக்கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள தேவாலயத்திற்கு மனைவியுடன் சென்றார். அங்கு வழிபாடு முடிந்ததும் காலை 10 மணியளவில் இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

பணம் திருட்டு

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறைகளில் இருந்த 3 பீரோக்கள் திறந்து கிடந்தது. மேலும் பொருட்கள் சிதறி கிடந்தன.

ஒரு பீரோவில் வைத்து இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரிய வந்தது. அதே பீரோவில் இன்னொரு பகுதியில் வைத்து இருந்த 40 பவுன் நகை திருட வந்தவர்களின் கண்ணில் படாமல் தப்பியது.

போலீசார் விசாரணை

இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகை பதிவுகளை சேகரித்தனர். மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

ஓய்வு பெற்ற பேராசிரியர் மனைவியுடன் வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர் என்று போலீசார் கருதுகிறார்கள்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்