< Back
மாநில செய்திகள்
பேருந்து நிலையம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - பழனியில் அதிர்ச்சி சம்பவம்
மாநில செய்திகள்

பேருந்து நிலையம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - பழனியில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
3 May 2023 1:46 PM IST

பழனியில் பேருந்து நிலையம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள என்.குரும்பபட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது27). இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது பழனி அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

விடுமுறைக்காக ஊருக்கு வந்த வடிவேல் இன்று காலை பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கினர். மேலும் அரிவாளால் வடிவேலை வெட்டத் தொடங்கினர். உயிருக்கு பயந்து வடிவேல் பஸ் நிலையம் நோக்கி ஓடினார். இருந்தபோதும் அவர்கள் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பஸ் நிலையம் அருகே பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தை பார்த்து அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட வடிவேல் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக வடிவேல் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி மூலம் கொலையாளிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். பட்டபகலில் பழனியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்