மதுரை
சிலைமான் அருகே கிணற்றில் இருந்து 2 எலும்பு கூடுகள் மீட்பு - போலீசார் விசாரணை
|சிலைமான் அருகே கிணற்றில் இருந்து 2 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலைமான் அருகே கிணற்றில் இருந்து 2 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசில் புகார்
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், பூவலிங்கம் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் சந்தேகத்திற்குரிய சிலரை பிடித்து விசாரித்தனர்.
அதில், ஒருவர் பூவலிங்கத்தோடு ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து, சிலைமான் அருகே உள்ள குன்னத்தூர் கிணற்றில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், அந்த நபரை அழைத்து கொண்டு, குன்னத்தூர் சென்று கிணற்றில் சோதனை செய்தனர்.
2 எலும்புகூடுகள்
கிணற்றில் இறங்கி தேடியபோது 2 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், 2-வது கிடைத்த எலும்பு கூடு யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ஒரே சமயத்தில் 2 எலும்பு கூடுகள் கிடைத்துள்ளன. அதில் ஒருவர் ஆண், மற்றொருவர் பெண்ணாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
மேலும், ஆண் இறந்து கிட்டத்தட்ட 7 மாதங்களும், பெண் இறந்து 2 மாதங்களும் இருக்கலாம். மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறும்" என்றனர்.