தேனி
கம்பம் அருகே செல்போன் கோபுரத்தை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு
|கம்பம் அருகே செல்போன் கோபுரத்தை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டது
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி தெற்கு ரத வீதியில் தனியார் இடத்தில் கடந்த 31-12-2005 அன்று செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரத்தை கடந்த 2010-ம் ஆண்டு மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நிறுவன அதிகாரிகள் சென்னையில் இருந்து செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்ய வந்தனர். அப்போது அந்த இடத்தில் செல்போன் கோபுரம் இல்லை.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமார் செல்போன் கோபுரத்தை காணவில்லை என்று ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேலு படத்தில் வரும் கிணற்றை காணவில்லை காமெடி போல செல்போன் கோபுரத்தை காணும் என போலீசில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.