தேனி
கம்பம் அருகேசொட்டு நீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி
|கம்பம் அருகே சொட்டு நீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கம்பம், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, நூக்கல், கொத்தமல்லி, புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த காய்கறிகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக ஆழ்துளை கிணறு, கிணற்றுப் பாசனம் மூலம் வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு பாய்ச்சும் போது அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறைவான இடங்களில் பயிர்களுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் எதிர்பார்த்த மகசூல் பெற முடியவில்லை. இதையடுத்து மத்திய மாநில அரசு குறைந்த அளவு தண்ணீரில் நல்ல மகசூல் பெறும் வகையில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர். தெளிப்பு நீர் பாசனம் என்பது மழை பெய்வது போல் தண்ணீர் பரவலாக நிலத்தில் விழுவதால் நிலங்கள் எப்போதும் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதன் மூலம் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.