தேனி
பெரியகுளம் அருகேபேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
|பெரியகுளம் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி, ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 45). இவர், பெரியகுளத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி இவர், தனது குடும்பத்துடன் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார். வீட்டின் சாவியை உறவினரான கவுசல்யா என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். மறுநாள் கவுசல்யா வீட்டை திறந்து விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வீட்டை பூட்டி சென்றார்.
இதற்கிடையே அவர் சம்பவத்தன்று மீண்டும் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்புற இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடப்பாரையால் நெம்பி கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, சுப்புராமிற்கு தகவல் கொடுத்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சுப்புராம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2¼ பவுன் மோதிரம், கம்மல், ரூ.20 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.