கடலூர்
பெண்ணாடம் அருகே டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|பெண்ணாடம் அருகே டாக்டர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 52). இவருடைய மனைவி தனலட்சுமி (45). இவர்களுக்கு மனோ(28), வினோ (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமார், நாக்பூரில் உள்ள மெட்ரோ ரெயில்வேயில் பாதுகாப்பு மேலாளராகவும், மனோ நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும், வினோ புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராகவும் வேலை பார்த்து வருகின்றனர். தனலட்சுமி மட்டும் இறையூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வினோ விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நகைகள் கொள்ளை
நேற்று முன்தினம் இரவு வினோ மேல்மாடியிலும், தனலட்சுமி கீழ் வீட்டிலும் படுத்து தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் சத்தம் கேட்டு தனலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வினோவை அழைத்து வந்து பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, வெள்ளி சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டில் வைத்திருந்த நகை பைகள் வீட்டை சுற்றிலும் கிடந்தன. அந்த பைகளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.