< Back
மாநில செய்திகள்
நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி
ஈரோடு
மாநில செய்திகள்

நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி

தினத்தந்தி
|
15 Aug 2023 5:59 AM IST

நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நம்பியூர்

நம்பியூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தொழிலாளி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி மாதேஸ்வரி (வயது 50). இவர்களுக்கு கார்த்தி (27), சிவானந்தம் (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்தி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள விசைத்தறி பட்டறையில் வேலை செய்து வருகிறார். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சிவானந்தம் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கருமத்தம்பட்டியில் உள்ள கார்த்தியை பார்ப்பதற்காக பொம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து மாதேஸ்வரி, சிவானந்தம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு கார்த்தியை பார்த்துவிட்டு அவர்கள் 2 பேரும் இரவில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நேருக்கு நேர் மோதல்

கோபியை அடுத்த நம்பியூர் துணை மின் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த நம்பியூர் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக் என்கிற தீம்பா செட்டோம் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், சிவானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த மாதேஸ்வரி, சிவானந்தம் ஆகிய 2 பேரையும் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தீபக்கை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாதேஸ்வரி, சிவானந்தம் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாதேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தீபக்கும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்