மதுரை
மேலூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிய கார் டிரைவர் வெட்டிக்கொலை
|மேலூர் அருகே வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கார் டிரைவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலூர்,
டிரைவர்
மதுைர மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 45). இதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவர் சென்னையில் மருந்து விற்பனை தொழில் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கட்டுமான பணிக்காக கீழையூர் வந்த வெங்கடேசன் கடந்த சில நாட்களாக கீழையூர் அருகே அட்டபட்டி சமத்துவபுரத்தில் உள்ள தனது மனைவியின் அக்காள் பரமேஸ்வரி வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வெங்கடேசனின் கார் டிரைவராக ஜெயராமன் வேலை செய்து வந்தார்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமேஸ்வரியின் வீட்டினுள் வெங்கடேசனும், வீட்டின் வெளியே கட்டிலில் டிரைவர் ஜெயராமனும் தூங்கினர். அப்போது வெளியே கட்டிலில் தூங்கிய ஜெயராமனை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியன்ஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் கீழவளவு போலீசார் கொலை நடந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் ஜெயராமனின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் வெளியே தூங்கிய ஜெயராமனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
முன்விரோதம் காரணமாக ஜெயராமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.