தூத்துக்குடி
மணப்பாடு அருகேமூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
|மணப்பாடு அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
மணப்பாடு அருகே, ஊருக்கு வழி கேட்பது போல மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ெசன்ற 2 மர்ம வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மூதாட்டி
மணப்பாடு புதுகுடியேற்று முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆத்தி நாடார் மனைவி சூசை அம்மாள் (வயது 75). இவர், தனது கணவர் ஆத்தி நாடாருடன் புது குடியேற்றில் குடியிருந்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
சூசையம்மாள் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை புதுகுடியேற்று பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை பார்ப்பதற்காக புதுகுடியேற்று பஸ் ஸ்டாப் அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாட்டில் இருந்து பெரியதாழை நோக்கி செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.
சங்கிலி பறிப்பு
அவர்கள் மோட்டார் சைக்கிளை சூசையம்மாள் அருகில் நிறுத்தி, 'அழகப்புரம் எப்படி செல்ல வேண்டும?்' என்று கேட்டுள்ளனர். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் சூசையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்...திருடன் என கூச்சலிட்டவுடன், அந்த 2பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அவரிடம் வழிப்பறி செய்யப்பட்ட சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சமாகும். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.