< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுத்து நகை-பணம் கொள்ளை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே துணிகரம் நள்ளிரவில் வீடு புகுத்து நகை-பணம் கொள்ளை

தினத்தந்தி
|
31 Aug 2023 1:02 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பீர் பாட்டில் மற்றும் செங்கற்களால் தாக்கி நகை, பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42).இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்

பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் அவரது மனைவி துர்கா (38), மகன் சந்தோஷ் (15), மகள் சாருலதா (13) மற்றும் துர்காவின் தாயார் சாந்தா (62) ஆகியோர் மட்டுமே முன்வாசலில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கிகொண்டிருந்தனர். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதையடுத்து நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமிகள் தனியறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 7 பவுன் நகைகள், ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் பூஜை அறையில் இருந்த சுமார் 1 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் ஆகிவற்றை திருடினர்.

பின்னர் வராண்டாவில் தூங்கிகொண்டிருந்த துர்காவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கத்திமுனையில் மர்ம ஆசாமிகளில் ஒருவன் பறிக்க முயன்றான். இதனைக்கண்டு திடுக்கிட்டு எழுந்த துர்கா, தனது தங்க சங்கிலியை பிடித்தவாறு திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அனைவரும் கண் விழித்தனர்.

தங்க சங்கிலியை பறிக்க முடியாத நிலையில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது செங்கற்களையும், உடைந்த பீர்பாட்டிலையும் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலை மறைவாகினர்.

இதற்கிடையில் துர்காவின் கூச்சலை கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து நேற்று பிற்பகல் வந்த கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளையர்கள் கைகளில் கத்தியுடன் ஜட்டி மட்டுமே அணிந்து வந்துகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா ஏதும் உள்ளதா? அதனில் ஏதேனும் ஜட்டி கொள்ளையர்கள் குறித்து காட்சி பதிவாகி உள்ளதா? என விசாரித்து துப்பு துலக்கி கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை போலீஸ் கிரியா சக்தி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே உள்ள முதுகூர் ஓம்சக்தி கோவில் திருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 39). இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடிச்சென்றனர். அதேபோல கடம்பத்தூர் அருகில் உள்ள ஏகாட்டூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிலிருந்து 2 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்