கன்னியாகுமரி
குலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
|குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
நாகர்கோவில்,
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி விளையாட்டு மைதானங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக மினி விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
விளையாட்டு வீரா்கள்
குமரி மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். மேலும் ஏராளமான மாணவ-மாணவிகள் நல்ல விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தான் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு அலைச்சல் மற்றும் செலவு ஏற்படுகிறது.
இவற்றை போக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு மினி விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மினி விளையாட்டு மைதானமும் ரூ.3 கோடி செலவில் 6 முதல் 7 ஏக்கர் வரை அமைக்கப்படும்.
கலெக்டர் ஆய்வு
இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் குலசேகரம் அருகே கல்லடிமாமூடு என்னும் இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
அங்கு 4.83 ஏக்கர் பரப்பில் ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. 400 மீட்டர் ஓடுதளம், பொருட்கள் வைப்பு அறை, அலுவலக அறை, கழிவறை போன்றவை அமைக்கப்பட உள்ளன. இங்கு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி எடுக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் தொடக்கம்
இந்த மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியானது கடந்த 19-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் விரைவில் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.