தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ;பெண் உடல் கருகி பலி
|கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பெண் உடல் கருகி பலியானார்.
தீக்குச்சி ஆலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகளை மரக்கட்டைகளில் இருந்து சிறிதாக வெட்டி தயாரித்து கொடுப்பது வழக்கம்.
நேற்று அந்த ஆலை இயங்காத நிலையில், ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காய வைக்கும் பணியில் கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 75), சித்திரம்பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி (35) ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர்.
தீயில் கருகி பெண் பலி
பின்னர் மதியம் அவர்கள் 2 பேரும் ஆலையில் எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பெண்களும் ஆலையில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்றனர். ஆனால், தீ மளமளவென்று ஆலை முழுவதும் பரவியது. அங்கு காய வைத்திருந்த தீக்குச்சிகளிலும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
மாரியம்மாள் வெளியே ஓடி வந்தபோது, அங்கு காய வைக்கப்பட்டு இருந்த குச்சிகளில் எரிந்த தீயில் நிலைதடுமாறி விழுந்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கனகலட்சுமி பலத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்.
மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும், மேற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
படுகாயமடைந்த கனகலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த மாரியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே தீக்குச்சி ஆலையில் நடந்த பயங்கர தீ விபத்தில் பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.