மதுரை
கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்து 17 மாணவ-மாணவிகள் காயம் - அமைச்சர் மூர்த்தி நேரில் ஆறுதல்
|கொட்டாம்பட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் 17 பேர் காயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி
.
வேன் கவிழ்ந்தது
கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வருவதற்கும் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்கும் அரசு பஸ்களை மாணவ-மாணவிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல நேரங்களில் அரசு பஸ்கள் வருவதில்லை.
இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல மாணவ-மாணவிகள் காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ் வராததால் வஞ்சிப்பட்டி, கம்பாளிப்பட்டி, சுக்காம்பட்டி பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த மாணவ-மாணவிகள் அவ்வழியே சென்ற மினிவேனில் ஏறினர். மினிவேன் சிறிது தூரம் சென்ற நிலையில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
17 பேர் காயம்
அதில் சென்ற அனைத்து மாணவ-மாணவிகளும் காயமடைந்து அலறினர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
மேலும் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவ-மாணவிகளை அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் வஞ்சிபட்டியை சேர்ந்த விஷ்ணு, விஜயராஜ், மேனகா, சேதுபதி, சோனா, கம்பாளிபட்டியை சேர்ந்த பிரியதர்சினி ஆகிய 6 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அமைச்சர் ஆறுதல்
விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மினிவேன் டிரைவர் மேனிநாதன்(வயது 22) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பெரியபுள்ளான், புதூர் பூமிநாதன் ஆகியோரும் ஆறுதல் தெரிவித்தனர்.