ஈரோடு
கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில்வீணாகும் குடிநீரால் வாகன ஓட்டிகள் அவதி
|கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் வீணாகும் குடிநீரால் வாகன ஓட்டிகள் அவதியைடந்துள்ளனா்.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் காந்தி சிலையையொட்டி செல்லும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். 2 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வீணாக செல்வதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் அவர்கள் இதுகுறித்து கூறும்போது, 'காந்தி சிலை அருகில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் குடிநீர் வீணாகி ரோட்டில் செல்வதால் மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.