தேனி
கடமலைக்குண்டு அருகேவனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
|கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
கடமலைக்குண்டுவை அடுத்த மேகமலை வனச்சரக அலுவலகம் அருகே கோம்பைத்தொழு சாலையோரம் குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடமலைக்குண்டு பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து அருகே உள்ள மலையடிவார வனப்பகுதியில் விழுந்தது. இதனால் வனப்பகுதியில் குறிப்பிட்ட அளவிலான பரப்பளவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டது. அந்த பகுதியில் குரங்குகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இதனால் பிளாஸ்டிக் குப்பைகளால் குரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவியது. இதன் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வனப்பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊராட்சி தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். விரைவில் குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறப்பது தடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.