திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற செயலாளர் பணியிட மாற்றத்தினால் கண்ணீர் விட்டு கதறிய கிராம மக்கள்
|கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற செயலாளர் பணியிட மாற்றத்தினால் கண்ணீர் விட்டு கதறிய கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் சிட்டிபாபு (வயது 43) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக வேலை செய்து வந்தார். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எப்போது யார் வந்தாலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் குணமுடையவர். இதனால் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார். தற்போது புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த செயலாளர் சிட்டிபாபு சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள நேமளூர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று சிட்டிபாபு தற்போதைய தனது சொத்து மதிப்பு எவ்வளவு? அதற்கான விளக்கம் போன்றவற்றையும் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறிய அவர் கண்ணீர் மல்க அங்கிருந்து விடை பெற்றார். அவருக்காக அலுவலக வாசலில் காத்திருந்த துப்புரவு தொழிலாளர்களும், கிராம பெண்களும், பொதுமக்களும் அவரை சூழ்ந்து அழுதவாறு தங்களது நன்றியை தெரிவித்தனர். மேலும் இடமாற்றத்தை ரத்து செய்து சிட்டிபாபுவை மீண்டும் இதே ஊராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கிராம மக்களும், துப்புரவு மணியாளர்களும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.