தேனி
கூடலூர் அருகேஅரசு விதைப்பண்ணையில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|கூடலூர் அருகே அரசு விதைப்பண்ணையில் சுற்றுச்சுவர் கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
கூடலூர் அருகே தாமரைகுளம் பகுதியில் அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையை சுற்றி 47.86 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் தரம் பிரிக்கப்பட்டு விதை நெல்லாக மாற்றி மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான தரம் பிரிக்கும் எந்திரகூடம், விவசாய பணிகளுக்கான எந்திர உபகரணங்கள் மற்றும் அலுவலகங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் வயல்வெளிகளைச் சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதைப்பண்ணையில் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது.
இங்கு வேளாண்துறை அலுவலர்கள், காவலர்கள் குடியிருப்பு வசதிகள் இருந்தும் இங்கு யாரும் தங்குவது இல்லை எனத் தெரிகிறது. இதனால். இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் மதுபான கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அரசு விதைப்பண்ணையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டவேண்டும், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அதிகாரிகள் தங்கி பணிபுரிய மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.