கடலூர்
கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
|கடலூர் அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் போலீசாருக்கு ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் கடலூர் அடுத்த ராமாபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன் கார்த்திக்குமார், அசோக்குமார், சீனிவாசலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.
அதனை தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா, லாட்டரி மற்றும் சாராயம் விற்பனையை தடுப்பது குறித்தும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர்.