தேனி
கூடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு
|கூடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
கூடலூர் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலப்பதை தடுக்க கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு குள்ளப்பகவுண்டன்பட்டி ரோட்டில் ஒழுகுவழி சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆங்கூர் பாளையம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் சிந்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு மேல் பகுதியில் அமைத்தால் முல்லைப்பெரியாற்றில் வீணாக கலக்கும் தண்ணீர், அருகில் உள்ள வைரவன் வாய்க்காலில் சென்று நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதனால் அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாற்று இடத்தில் அமைக்க ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேனி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன், வருவாய் ஆய்வாளர் பொன்.கூடலிங்கம், நகராட்சி நகரமைப்பு அலுவலர் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.