< Back
மாநில செய்திகள்
கூடலூர் அருகே  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

கூடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கூடலூர் நகரை சுற்றியுள்ள கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூடலூர் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலை வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இதனால் குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கூடலூர் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கூடலூர்- குள்ளப்பகவுண்டன்பட்டி சாலை சிறு வாய்க்கால் கீழ்ப்புறமாக இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சுத்திகரிப்பு நிலையத்தை சிறு வாய்க்கால் மேற்புறமாக அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்

இதனைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் நேற்று உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் சந்திரசேகர், கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி, கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்