< Back
மாநில செய்திகள்
கூடலூர் அருகே  அரசு பஸ் கவிழ்ந்து தொழிலாளி பலி
தேனி
மாநில செய்திகள்

கூடலூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
17 Jun 2022 6:09 PM IST

கூடலூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மேலும் பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ்

கோவையில் இருந்து குமுளி நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் அதிகாலை 5 மணிக்கு தேனி மாவட்டம் கூடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் குமுளி நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் 25 பேர் பயணம் செய்தனர்.

கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூடலூரை அடுத்த கருணாநிதி காலனி அருகே வந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து பஸ்சில் பயணம் செய்தவர்கள் அய்யோ அம்மா காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர்.

தொழிலாளி பலி

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.

அப்போது இடிபாடுகளில் சிக்கிய கூடலூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாயி என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 50) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கூடலூரை சேர்ந்த பெருமாளப்பன் (66), மாடசாமி (54), வீராசாமி (60), பெரியகுளத்தை சேர்ந்த காளியம்மாள் (65), திருப்பூரை சேர்ந்த மலர்விழி (32) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜெயமங்கலத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனிச்சாமியை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்