தேனி
கூடலூர் அருகேசுகாதார வளாகம் கட்ட விவசாயிகள் எதிர்ப்பு:வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு
|கூடலூர் அருகே சுகாதார வளாகம் கட்ட விவசாயிகள் எதிர்ப்பு ெதரிவித்தனர். மேலும் மாற்று இடத்தில் கட்டக்கோரி நகராட்சி ஆணையரிடம் மனு ெகாடுத்தனர்.
சுகாதார வளாகம் கட்ட எதிர்ப்பு
கூடலூர் அருகே கூலிக்காரன் பாலம் ஓடை வழியாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சமுதாய சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் நேரில் சென்று புகார் மனு கொடுத்தனர். இதனால் சுகாதார வளாகம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த இடத்தில் சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து நகராட்சி ஆணையர் காஞ்சனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விவசாயிகள் மனு
அந்த மனுவில், இந்த சுகாதார வளாகம் கட்டும் இடம் வருவாய்த்துறை ஆவணங்களில் வண்டிப்பாதையாக உள்ளது. இது மழைக்காலங்களில் நீர் வழிந்தோடும் நீர்வழிப் பாதையாகும். வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் எவ்வித ஒப்புதலும் பெறாமல் நகராட்சி ஆக்கிரமிப்பு செய்து கழிப்பறை கட்ட தொடங்கி உள்ளது.
எனவே இங்கு சுகாதார வளாகம் கட்டப்படுவதை நிறுத்தி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வேறு இடத்தில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.