சென்னை
குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
|குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே பழைய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கட்டண 'பார்க்கிங்' இயக்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த 'பார்க்கிங்' மூடப்பட்டது. அதில் பல மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த பழைய இருசக்கர வாகனங்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்த பகுதியில் கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால் குரோம்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் அரை மணிநேரம் போராடி இருசக்கர வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.