மதுரை
சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் தேங்கிய மழைநீர் - விவசாயிகள் அவதி
|சோழவந்தான் அருகே வயலில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
கண்மாய்
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி 1000 ஏக்கர் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாய் கரையில் இருந்து மெயின் ரோடு செல்வதற்கு சிறிய பாலம் அரசு சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற உயரம் குறைவாக தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த தடுப்பணை சுமார் 3 அடி உயரத்தில் அதிகரித்து கட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையில் இந்த கண்மாய் நிரம்பியது. கண்மாய் நிரம்பிய தண்ணீர் தடுப்பணை வழியாக செல்கிறது.
வயலை சூழ்ந்த மழைநீர்
தடுப்பணையின் உயரம் 3 அடி உயர்த்தி கட்டியதால் அதில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக தடுப்பணை அருகில் உள்ள தாழ்வான வயல்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது. ஓரிரு நாளில் பெய்த மழைக்கு இந்த நிலை என்றால் தொடர்ந்து மழை பெய்தால் இந்த நிலங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மலைப்பட்டி கிராமத்திற்கும் தண்ணீர் புகுந்து விடக்கூடிய அவல நிலை உள்ளது. இதுபோக தென்கரை கழிவுநீர் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வந்தால் மேலும் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக தேங்கி வயலில் தண்ணீர் சூழ்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் நல்லமணி, வெள்ளையன் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுவாக தடுப்பணை கட்டினால் அதில் தண்ணீர் தேங்கி விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இங்கு ஏற்கனவே இருந்த தடுப்பணையை உயரம் அதிகரித்து கட்டும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஏனெனில் தடுப்பணையை ஒட்டி உள்ள நிலங்களில் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு உள்ளது என்றோம். அதற்கு அதிகாரிகள் தடுப்பணையை உயர்த்தி கட்டுவதால் தண்ணீர் தேங்காது. அப்படி தண்ணீர் தேங்கினால் அதன் உயரத்தை குறைத்து தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது சோழவந்தான் பகுதியில் பெய்த ஓரிரு நாள் மழைக்கே கண்மாய் நிரம்பி தடுப்பணையில் தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் தடுப்பணையை சுற்றி உள்ள விவசாய நிலத்தையும் குளம் போல ஆக்கிரமித்து கொண்டது. தற்போது விவசாய நிலத்தில் பயிரிட்டு உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் அதிகமாக தேங்கி அழுகி போக வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட கலெக்டரும், அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தடுப்பணை உயரத்தை குறைத்து கட்டியும், மழை இல்லாத காலங்களில் கண்மாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.