மதுரை
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை
|சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே மேட்டுநீரத்தான் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். இதில் ஒருவர் கருப்புத் துணியால் முகத்தை மூடி இருந்தார். மற்றொருவர் கோவிலில் இருந்த மஞ்சள் சேலையை கிழித்து முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கட்டி இருந்தார். இருவரும் சேர்ந்து கம்பியால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சோழவந்தான் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவானதை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இந்த கோவிலில் 5-வது முறையாக உண்டியல் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.