தேனி
போடி அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
|போடி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் போயகொண்டா (வயது 27). இவர் போடி பகுதியில் தங்கியிருந்து குடிநீர் குழாய் பதிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் சுப்பிரமணியம் (46), வெங்கட்ரமணா (20). இன்று காலை இவர்கள் 3 பேரும் போடியில் இருந்து டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை வெங்கட்ரமணா ஓட்டினார். போடியை அடுத்த மீனாட்சிபுரம் கண்மாய் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுப்பிரமணியம், வெங்கட்ரமணா ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சுப்பிரமணியம் மதுரை அரசு மருத்துவமனையிலும், வெங்கட்ரமணா தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.