தேனி
போடி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|போடி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
போடி தாலுகா போலீஸ் நிலையம் போடி நகரில் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ரெங்கநாதபுரம், மேலசொக்கநாதபுரம், தருமத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பொட்டிப்புரம், முத்தையன்செட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம மக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் 2 கி.மீ. முதல் 25 கி.மீ. தூரம் வரை பயணித்து போடி போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைவதால் சிலமலை கிராமத்தில் புதிதாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து புதிதாக போலீஸ் நிலையம் அ்மைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிலமலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்துடன் புதிதாக போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைப்பதற்கும் இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்த இடங்களை போடி வட்டாட்சியர் ஜலால் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது இந்த இடங்களில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.