ஈரோடு
பவானிசாகர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|பவானிசாகர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்
பவானிசாகர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ளது நெசவாளர் காலனி. இந்த பகுதி உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்டதாகும். இங்குள்ளவர்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 9 மணி அளவில் ஒன்று திரண்டு அங்குள்ள சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, உத்தண்டியூர் ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் முறையாக வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.