நீலகிரி
அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்- உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
|அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் பழுதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் பழுதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
குண்டும், குழியுமான சாலை
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே புஞ்சைகொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கீழ்காரக்கொல்லியிலிருந்து சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான தனியார் வாகனங்கள், ஆட்டோக்களும், ஆம்புலன்ஸ்களும் சென்று வருகின்றது. இந்தநிலையில் சாலை கீழ்காரக்கொல்லி முதல் புஞ்சகொல்லிவரை உடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையில்தான் புஞ்சகொல்லியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். தற்போது சாலை பழுதாகி குண்டும்குழியுமாக காணப்படுவதால் அவசர தேவைகளுக்கு எந்த ஒரு வாகனமும் செல்வதில்லை. இதனால் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தலையில் வைத்து பொதுமக்கள் சுமந்து செல்கிறார்கள். அதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பழுதாகும் ஆம்புலன்ஸ்கள்
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:- கீழ்காரக்கொல்லி சாலை மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே மண் ரோடுகளும், சாலைகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு வாகனங்கள் சரிவர வருவதில்லை. குறிப்பாக அவசர தேவைகளுக்கு நோயாளிகள் மற்றும் கர்பிணி பெண்களை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்களும் பழுதடைந்து சாலையின் நடுவே நின்றுவிடுகிறது.
மேலும் ரேஷன் பொருட்களை கையில்தான் கொண்டு வரவேண்டி உள்ளது.இதேபோல் சாலையில் நடந்து வரும் போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. தற்போது பெய்யும் மழையில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டு ரோடு சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது. அதனால் பேராபத்துகள் ஏற்படுவதற்குள் பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.