தூத்துக்குடி
ஆத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; வாலிபர் சாவு
|ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில் கொடைவிழாவுக்கு...
ஆத்தூரை அடுத்துள்ள முக்காணி தேவர் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் மாதவன் (வயது24), கோவை பச்சையம்பாளையத்தில் உள்ள தனியார் ஆயில் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 28-ந்தேதி கோவில் கொடை விழாவை முன்னிட்டு முக்காணிக்கு வந்தார். விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவிலுக்கு செல்ல பூ வாங்குவதற்காக, முக்காணியிலிருந்து பழைய காயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் நண்பர் சங்கரலிங்கம் என்ற கோகுலும் சென்றார்.
வேன் மோதியது
இவர்களுக்கு பின்னால் மாதவன் அண்ணன் இசக்கி துரையும், உறவினர் மாரிமுத்து என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, பின்னால் பழையகாயலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த வேன் ஒன்று மாதவன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மாதவனும், கோகுலம் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மோதிய வேகத்தில் வேனும் தாறுமாறாக ஓடி சாலைஓரத்திலுள்ள பள்ளத்தில் சாய்ந்து நின்றது. அதில் இருந்த தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
சாவு
இதற்கிடையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த மாதவனையும், கோகுலையும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இசக்கி துரை, மாரிமுத்து ஆகியோர் மீட்டு ஆட்டோ மூலம் ஆத்தூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மாதவன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணனும், உறவினரும் கதறி அழுதனர்.
மேலும் படுகாயமடைந்த கோகுல் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மாதவனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
சாலைமறியல்
அப்போது அங்கு வந்த மாதவனின் உறவினர்கள், வேன் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியவாறு தனியார் ஆஸ்பத்திரி முன்பு தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிககை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேன்டிரைவரான நாங்குநேரி கூந்தன்குளத்தைச் சேர்ந்த சுடலை கண்ணு மகன் காசி(25) மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.