தேனி
ஆண்டிப்பட்டி அருகே குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்
|ஆண்டிப்பட்டி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரினர்.
ஆண்டிப்பட்டி அருகே முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் நுழைவுவாயில் பகுதியில் பழமையான குளம் ஒன்று உள்ளது. கடந்த காலங்களில் குடிநீர் தேவை, கால்நடை வளர்ப்புக்காக குளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சி காரணமாக இந்த குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை. மேலும் முறையாக பராமரிக்காத காரணத்தால் குளம் புதர்மண்டி காட்சியளித்தது.
இதனால் குளத்தை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளத்தை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வசித்துவரும் இந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரி வருகின்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் 10 அடி ஆழத்திற்கு குளத்தை தூர்வாரி நான்கு புறங்களிலும் உள்ள கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். தூர்வாரும் பணிகள் முடிந்த பின்னர் குளக்கரைகளில் மரங்களை நட முடிவு செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் பாராட்டினர்.