< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே  வைகை அணையில் மீன்கள் திருட்டு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்கள் திருட்டு

தினத்தந்தி
|
17 Sept 2022 10:10 PM IST

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்கள் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வைகை அணை

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. வைகை அணை மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் மீன்பிடி தொழிலில் 140 மீனவர்கள் 70 பரிசல்களில் மீன் பிடித்து வருகின்றனர். இங்கு அதிகளவில் பிடிக்கப்படும் ஜிலேபி ரக மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பிடிக்கப்படும் மீன்களில் பாதியை அரசுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள மின்களை மீனவர்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அரசு வசம் வரும் மீன்கள் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அணையில் மீன்கள் வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மீன்கள் திருட்டு

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வைகை அணை சுற்றியுள்ள காமக்காள்ப்பட்டி, மேலக்காமக்காள்பட்டி, சர்க்கரைபட்டி, சொக்கத்தேவன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் டன் கணக்கில் மீன்கள் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்டு, குறைந்த விலையில் ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

மீன்வளத்தை பெருக்கும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்ப்புக்காக வைகை அணை நீர்தேக்கத்தில் விடப்படுகிறது. அந்த மீன்களை பிடித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே வைகை அணை நீர்தேக்கத்தில் திருட்டுத்தனமாக மீன்கள் பிடிப்பதை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்