< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே  இரு தரப்பினர் மோதல்; பஸ்சில் ஏறி நின்று ஆடியதால் பரபரப்பு
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே இரு தரப்பினர் மோதல்; பஸ்சில் ஏறி நின்று ஆடியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
31 Oct 2022 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே இரு தரப்பினர் மோதலின்போது பஸ் மீது ஏறி நி்்ன்று ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது க.விலக்கு, முத்தணம்பட்டி, பிராதுகாரன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரட்டுப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக மேளதாளம், பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக வந்தனர்.

இதனால் தேனி-மதுரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஊர்வலத்தில் வந்தவர்கள் தலைக்கு மேல் பட்டாசுகளை பிடித்தபடியும், சிலம்பாட்டம் ஆடியும் வந்தனர். அப்போது சாலையில் வந்த பஸ்சை மறித்து அதில் ஏறி நின்று கூச்சலிட்டனர். இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது போலீசார், வாலிபர்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டு தகராறாக மாறியது. பின்னர் தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்