தேனி
ஆண்டிப்பட்டி அருகே ேமாட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பூ வியாபாரி உள்பட 2 பேர் பலி
|ஆண்டிப்பட்டி அருகே ஓட்டலில் உணவு வாங்கி விட்டு வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூ வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.
குழந்தைக்கு உணவு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா குமணன்தொழு அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). மோட்டார்சைக்கிள் மெக்கானிக். இவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தார்.
இந்நிலையில் இவர், குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக மருத்துவமனையில் இருந்து குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரியான சுருளிவேல் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார்சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார்.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்
க.விலக்கு-வைகை அணை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கி விட்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளை திருப்பினார். அப்போது வைகை அணை சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ேமலும் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.விலக்கு போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இந்த விபத்தில் லாரி டிரைவரான பெருமாள்கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த மொக்கராஜ் என்பவரும் படுகாயம் அடைந்தார். அவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூ வியாபாரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.