தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? வெளியான தகவல்
|தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.செல்லும் என சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பா.ஜ.க கூட்டணியில் ஐக்கியமானது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பட்டியல் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டு வர தமிழக பா.ஜ.க. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேநேரம், அ.தி.மு.க.வும், பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்தார். இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க இணையும் என்று தகவல் வெளியானது. ஆனால் திடீர் திருப்பமாக பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க ஐக்கியமானது. இதற்கான கூட்டணி ஒப்பந்தம் இன்று காலையில் கையெழுத்தானது. பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்க பா.ஜ.க.முன்வந்துள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
இதனிடையே, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, விழுப்புரம், சிதம்பரம், மத்திய சென்னை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்பதூர், சேலம் ஆகிய தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.