என்.டி.ஏ. கூட்டணி அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
|3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தலைமையேற்று வழிநடத்தி சென்று அமோக வெற்றி பெற செய்ததுடன், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு பா.ம.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலுக்காக வலிமையான அணியை கட்டமைத்ததுடன், அந்த அணியின் வெற்றிக்கான உத்திகளையும் வகுத்த தாங்கள், அனைத்துப் பொறுப்புகளையும் உங்கள் தோள்களில் சுமந்ததுடன், நாடு முழுவதும் 250க்கும் கூடுதலான இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டீர்கள். உங்களின் இந்த கடுமையான உழைப்பும், மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த ஆதரவும், அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கு காரணமாகும்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் தலைமையிலான அரசு ஆற்றிய பணிகளும், படைத்த சாதனைகளும் ஈடு இணையற்றவை. அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றை விட அதிகமான சாதனைகளை இந்தியா உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்; வளமான, வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கான பயணத்தில் நீங்கள் வெற்றி பெற பா.ம.க. சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.