கரூர்
குளம், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும்: கலெக்டர் தகவல்
|தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக குளம், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றத. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடர் பெய்யும் மழையால் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், எந்தவொரு உயிரிழப்புக்கும் இடமளிக்காத வகையிலும் அனைத்துத் துறை அலுவலர்களும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.
மணல் மூட்டைகள்
பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு செய்து, வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற உரிய அமைப்புகளை உருவாக்க வேண்டும். வெள்ளத்தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையான மருந்து பொருட்களை இருப்பில் வைத்து கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க ஏதுவாக கரூர் மாவட்டத்தில் பள்ளிகள், சமுதாயக்கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.