நீலகிரி
என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி
|வெலிங்டன் எம்.ஆர்.சி. முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. இங்கு தமிழ்நாடு என்.சி.சி.-யில் (தேசிய மாணவர் படை) உள்ள பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 51 சீனியர் டிவிஷன் என்.சி.சி. மாணவர்கள் 12 நாள் பயிற்சி முகாமை நிறைவு செய்தனர். பயிற்சியில் வரைபட வாசிப்பு, ஆயுதங்களை கையாளுதல் மற்றும் களப்பணி உள்ளிட்ட அத்தியாவசிய ராணுவ பாடங்களை கற்றுக்கொண்டனர். மாணவர்கள் இடையே சகிப்புத்தன்மை, உடல் வலிமை, உடல் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கடுமையான பயிற்சி ராணுவ வீரரின் வாழ்க்கையையும், இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேவையான அர்ப்பணிப்பையும் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்கு வழங்கியது. ராணுவ பயிற்சியுடன், மாணவர்களுக்கு பல்வேறு சாகச பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. மலையேற்றம், தடையை கடக்கும் பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அவர்களின் தைரியம், தன்னம்பிக்கை வளர்ப்பதற்காகவும் திட்டமிடப்பட்டது. பயிற்சி முடித்த என்.சி.சி. மாணவர்கள் ராணுவ அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.