விருதுநகர்
கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
|மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறில் செங்கமலத்தாயார், சென்ன கேசவ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நடைபெற்றது. 8-ம் நாளன்று ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், 9-வது நாளன்று வித்யா லட்சுமி அலங்காரத்திலும் சாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதேபோல காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களிலும் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி பாரி வேட்டையாட செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் மற்றும் சொக்கர் கோவில்களில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுத்தறிவு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் கல்வி கடவுளான சரஸ்வதி, லட்சுமி, பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மாலை அணிவித்து. அரிசியில் ஓம் என்ற மந்திரச்சொல்லை குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.
சிவகாசி தொழில்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன், சிவகாசி ஆசாரி காலனி கங்கை கொண்ட மாரியம்மன், விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல தாயில்பட்டி, ஆலங்குளம், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகரில் நேற்று விஜயதசமி நாளில் மகர நோம்பு திருவிழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கமல் கண்ணன், நாகேந்திரன், நடராஜன், நெல்சன்தாஸ், லோடுமேன் சங்க தலைவர் பிச்சைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.