திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா; காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
|பழனி முருகன் கோவிலில், நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.
பழனி முருகன் கோவிலில், நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.
நவராத்திரி விழா
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜை நடைபெற்றது.
யானைக்கு காப்புக்கட்டு
இதைத்தொடர்ந்து காலசந்தி பூஜை செய்யப்பட்டு காப்புக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை மற்றும் வாகனங்கள், கோவில் யானை கஸ்தூரிக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
இதேபோல் பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
இதற்கிடையே நவராத்திரி விழா தொடக்கம் மற்றும் வார விடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுமார் 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்பு போடுதல் நிகழ்ச்சி
நவராத்திரி விழாவில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி வில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்போது பழனி முருகன் கோவிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. பின்னர் மாலை 3 மணிக்கு பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கிருந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று, வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வருதல், அர்த்தசாம பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.