< Back
மாநில செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி விழா 15-ந்தேதி தொடக்கம்
சென்னை
மாநில செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி விழா 15-ந்தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
13 Oct 2023 9:03 PM IST

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி விழா 15-ந்தேதி முதல் கொண்டாடப்பட இருக்கிறது.

பெண்மையை போற்றும் மகத்துவமான நவராத்திரி பெருவிழா வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. 9 நாட்கள் பெண் சக்திகளை போற்றி, அனைத்து ஜீவராசிகளும் ஒருசேர வணங்கும் வகையில் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்கும் ஆத்மார்த்தமாக அர்ப்பணிக்கப்பட்டு, பூஜை நடத்தப்படுகிறது.

அத்தகைய சிறப்புக்குரிய பெருவிழாவான நவராத்திரியையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி விழா 15-ந்தேதி முதல் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கிறது. கொலுவுடன் 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த விழா நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக 15-ந்தேதி மாலை 6 மணிக்கு மாணவ, மாணவிகள் நடத்தும் பூஜையுடன் தொடங்குகிறது.

இரவு 7 மணிக்கு மாம்பலம் ஆர்.விஜயலட்சுமி-ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நவராத்திரி பெருவிழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்