பிரமாண்ட கொலுவுடன் வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
|சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.
நவராத்திரி திருவிழாவையொட்டி 'சக்தி கொலு' என்ற பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது.
சுதா ரகுநாதன்
இந்த கொலுவை பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணை கமிஷனர் முல்லை ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருணின் இசை கச்சேரி நடந்தது. முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கொலுவை கண்டு ரசித்தனர்.
சிறப்பு பூஜை
நவராத்திரி திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 108 பேர் கொண்ட குழுவால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது.
காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு இசை கச்சேரி நடைபெறுகிறது.
நவராத்திரி திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக மீனாட்சி அம்மனுக்கு அக்டோபர் 2-ந் தேதி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.
'வித்யாரம்பம்' நிகழ்ச்சி
நவராத்திரி விழாவின் நிறைவு பகுதியாக அக்டோபர் 5-ந் தேதியன்று 2½ வயது முதல் 3½ வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை தொடங்கி வைக்கும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.