மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கோவில்களில் நவராத்திரி விழா
|மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.இதில் திரளான பக்தர்கள கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
படைவெட்டி மாரியம்மன் கோவில்
மயிலாடுதுறை சேந்தங்குடி படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 43-ம் ஆண்டு நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு, தினசரி பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவத்தின் நிறைவுநாளான நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொலு உற்சவத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பச்சைக்காளி, பவளக்காளி, இசைக் கலைஞர்கள் போன்று அமைக்கப்பட்டிருந்த நாட்டுப்புற கலைக்குழு பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான கொலு பொம்மைகளை பக்தர்கள் பார்வையிட்டுச் சென்றனர். இதில், பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், விஸ்வஹிந்து பரிஷத் பூசாரிகள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் குருமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்ம வித்யாம்பிகை அருள்பாளித்து வருகிறார். முன்பு ஒரு காலத்தில் படைப்பு கடவுளான பிரம்மா தன்னுடைய சக்தியை இழந்து விட்டார். இதனை தொடர்ந்து தன்னுடைய சக்தியை மீண்டும் பெறுவதற்கு ஏதுவாக பிரம்ம வித்யாம்பிகையை நோக்கி தவமிருந்து மீண்டும் சக்தியை பெற்றதாக ஐதீகம். இவரை வணங்கினால் ஞானம், கல்வி,வித்தை உள்ளிட்டவைகள் கிடைப்பதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அம்பத்தூரு சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த அம்மன் திகழ்கிறார். இத்தகைய சிறப்பு பெற்ற அம்மனுக்கு நவராத்திரி திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.