தேனி
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா
|தேனி அருகே பூதிபுரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்தது.
தேனி அருகே பூதிப்புரத்தில், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதிபராசக்தி உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்தி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரியின் 10-வது நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆதிபராசக்தி அம்மன் ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. ஆதிப்பட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கும் இந்த ஊர்வலம் சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் மகிஷாசுரனை ஆதிபராசக்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.