கோயம்புத்தூர்
அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா
|கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணி யோக நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
ஆர்.எஸ்.புரம்
கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் வேதபாட சாலா ஸ்ரீஅன்னபூரணி ஸ்ரீயோக நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவாத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி நேற்று இந்த கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு பூஜைகள், யாகங்கள் மற்றும் ஹோமங்கள் செய்யபப்பட்டன. பின்னர் சாமி சிறப்பு அலங்கார்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழா நிறைவு நாளான நேற்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் புலியாட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், தெய்யம், திரையாட்டம், மீன், களி, பட்டுப்பூச்சி ஆட்டம், ஹனுமான் பைலட் உள்பட பல்வேறு வேடம் அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, டி.பி.ரோடு, தடாகம் ரோடு ஆகிய சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தும், கொடியசைத்தும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் ஊர்வலத்தில் சென்றவர்கள் பல்வேறு வேடம் அணிந்து நடனமாடியபடி சென்றதை பலர் பார்த்து ரசித்தனர். இதையொட்டி ஊர்வலம் சென்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.